இந்திய வேகப்பந்து வீச்சாளரை வியந்து பாராட்டிய மேத்யூ ஹெய்டன்!


இந்திய வேகப்பந்து வீச்சாளரை வியந்து பாராட்டிய மேத்யூ ஹெய்டன்!
x

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜாகீர் கான், ஸ்ரீநாத் (தலா 44) ஆகியோரது சாதனைகளையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில் ஷமி வந்ததும் இந்தியாவின் பவுலிங் அட்டாக் எதிரணி பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட வைக்கும் அளவுக்கு மிரட்டலாக மாறியுள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "முகமது ஷமி மீண்டும் அணிக்குள் வந்தததிலிருந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கண்ணீரை தவிர வேறு எதுவுமில்லை. அவர் தன்னுடைய பந்து வீச்சால் தனது வழியை செதுக்கியுள்ளார். இதில் எந்த மர்மமும் இல்லை. ஏனெனில் அவர் தன்னுடைய மணிக்கட்டை பயன்படுத்தி ஸ்டம்ப் லைனை நோக்கி மிகவும் அழகாக வீசுகிறார்.

ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து நகர்த்துகிறார். இது மிகவும் கச்சிதமானது. இந்த உலகக்கோப்பையில் நாம் அடிக்கடி பேட்ஸ்மேன்களை பற்றி பேசுகிறோம். ஆனால் பந்து வீச்சில் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டு வருகிறார்" என்று பாராட்டியுள்ளார்.


Next Story