அந்த சி.எஸ்.கே பவுலரை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது கடினம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை


அந்த சி.எஸ்.கே பவுலரை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது கடினம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 March 2024 10:28 AM GMT (Updated: 11 March 2024 10:31 AM GMT)

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

சென்னை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தொட்டாலே சிக்சர் பறக்கும் பெங்களுரு சின்னசாமி மைதானங்களைப்போல் சென்னை சேப்பாக்கத்தில் மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது மிகவும் கடினம் என்று எச்சரிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"களமிறங்கியதும் சிக்சர்கள் அடிப்பது எல்லா வீரர்களுக்குமே கடினமாக இருக்கும். பொதுவாக நீங்கள் சிங்கிள் மற்றும் டபுள் எடுத்து உங்களுக்கான நேரத்தை எடுப்பீர்கள். ஒருவேளை நீங்கள் வந்ததுமே பவுண்டரிகள் அடித்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவுட்டாகலாம். எனவே முதல் போட்டியில் சேப்பாக்கம் பிட்ச்சில் மேக்ஸ்வெலை விட ரவீந்திர ஜடேஜா முன்னிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஏனெனில் அங்கே பந்து சற்று நின்று வரும். கொஞ்சம் சைட் ஸ்பின்னும் இருக்கும். அதே சமயம் மேக்ஸ்வெல் களத்தில் நின்று விட்டால் யாராலும் தடுக்க முடியாதவராக செயல்படுவார். ஆனால் சேப்பாக்கம் பிட்ச்சில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சிக்சர்கள் அடிப்பது யாருக்கும் கடினமாக இருக்கும். இருப்பினும் அது போன்ற வேலையை மேக்ஸ்வெல் மட்டுமே செய்யக்கூடியவர். எனவே இந்த போட்டியில் யார் வெல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார்.


Next Story