'இன்னொரு தருணத்தில் சதம் அடிப்பேன் என்று நம்புகிறேன்' - கேஎல் ராகுல்


இன்னொரு தருணத்தில் சதம் அடிப்பேன் என்று நம்புகிறேன் - கேஎல் ராகுல்
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 9 Oct 2023 2:53 AM GMT (Updated: 9 Oct 2023 6:30 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டின.

'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், மிட்செல் மார்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். மார்ஷ் (0), பும்ராவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு டேவிட் வார்னரும், ஸ்டீவன் சுமித்தும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் வலுவான ஷாட்டுகள் அடிப்பது சிரமம் என்பதை உணர்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானத்தை கடைபிடித்தனர்.

ஆனால் மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய மும்முனை சுழல் தாக்குதலை கொண்டு வந்ததும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை முற்றிலும் நிலைகுலைந்தது.

ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் நல்ல நிலையில் காணப்பட்ட ஆஸ்திரேலியா அடுத்த 30 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. அப்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திண்டாடினர். 20 முதல் 31.4 ஓவர் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் (28 ரன், 35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) 200-ஐ நெருங்க உதவினார்.

49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், குல்தீப், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவும் தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியாவின் புயல் வேகத்தில் 'டக்-அவுட்' ஆனார்கள். ஸ்ரேயாஸ் அய்யரும் ரன் கணக்கை தொடங்காமலேயே அடங்கினார். 2 ரன்னுக்குள் 3 முன்னணி தலைகள் உருண்டதால் இந்தியா திகைப்புக்குள்ளானது. விராட் கோலியும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாக 12 ரன்னில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிட்செல் மார்ஷ் தவற விட்டார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனை.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து அணியை படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்டனர். அவசரப்படாமல் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்திய இவர்கள் ஸ்கோர் 100-ஐ கடந்ததும் நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு வேகம் காட்டினர்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (85 ரன், 116 பந்து, 6 பவுண்டரி) இலக்கை நெருங்கிய போது ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் ராகுல் சிக்சருடன் இன்னிங்சை சுபமாக முடித்து வைத்தார். இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 97 ரன்களுடனும் (115 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

போட்டிக்கு பின் ராகுல் அளித்த பேட்டியில்,

'பவுண்டரி, அதன் பிறகு சிக்சர் அடித்தால் சதத்தை எட்ட முடியும் என்று கணக்கிட்டு விளையாடினேன். ஆனால் அந்த ஷாட் சிக்சருக்கு சென்றதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டது. இன்னொரு தருணத்தில் சதம் அடிப்பேன் என்று நம்புகிறேன்'என்று கூறினார்.

உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை டெல்லியில் வருகிற 11-ந்தேதி சந்திக்கிறது.


Next Story