டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்...விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய முகமது ஷமி...!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளி முகமது ஷமி முன்னேறி உள்ளார்.
நாக்பூர்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 400 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா தரப்பில் அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 47 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் அவர் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் பறக்க விட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை முந்தி உள்ளார். கோலி இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 24 சிக்சர்கள் அடித்துள்ளார். ஷமி இதுவ்ரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சிக்சர்கள் அடித்து விராட் கோலியை முந்தி உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.தோனி (78) 2ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (69) 3ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4ம் இடத்திலும் உள்ளனர்.