5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆகாஷ் மத்வால் அபாரம் : மும்பை அணி அதிரடி வெற்றி..!!


5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆகாஷ் மத்வால் அபாரம் : மும்பை அணி அதிரடி வெற்றி..!!
x

மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

சென்னை,

இன்று சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்களிலும், இஷான் கிஷன் 15 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேமரூன் கிரீன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) 23 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய அவர் நவீன் உல்-ஹக் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய டிம் டேவிட் 13 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும், ஜோர்டான் 4 ரன்களும், அதிரடி காட்டிய வதேரா 23 (12) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நவீன் உல்-ஹக் 4 விக்கெட்டுகளும், யாஸ் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், மொஷின் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் சார்பில் கெய்ல் மேயர்ஸ் மற்றும் மான்கட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் மான்கட் 3 ரன்களும், கெய்ல் மேயர்ஸ் 18 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் குர்ணால் பாண்டியா 8 ரன்களும், ஆயுஸ் பதோனி 1 ரன்னும், நிகோலஸ் பூரன் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டோய்னிஸ் 40 (27) ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதமும் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக ரவி பிஷ்னோய் 3 ரன்களும், ஹூடா 15 ரன்களும், மோஷின் கான் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் நவீன் உல்-ஹக் 1 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் லக்னோ அணி 16.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. இதனையடுத்து லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.

முன்னதாக ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை குவாலிபையர் 2-ல் மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.


Next Story