இந்தியாவின் சவாலை சமாளிக்க புதிய வியூகம்: அஸ்வின் போன்று சுழற்பந்து வீசும் பவுலரை கொண்டு ஆஸ்திரேலியா பயிற்சி
இந்தியாவின் சவாலை சமாளிக்க புதிய வியூகம் வகுத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அஸ்வின் போன்று சுழற்பந்து வீசும் ஒருவரை கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறது.
பெங்களூரு,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூரு புறநகரான ஆலூரில் உள்ள கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்திய மண்ணில் நடக்கும் இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் மேலோங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அஸ்வின், அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அஸ்வினை போல் சுழற்பந்து வீசும் ஒரு வலை பயிற்சி பவுலரை தேடிப்பிடித்து அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அந்த பவுலரின் பெயர் மகீஷ் பித்தியா (வயது 21). குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த டிசம்பர் மாதம் ரஞ்சி கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக அறிமுகம் ஆனார்.
இதில் வேடிக்கையான ஒரு விஷயம் என்னவென்றால் மகீஷ் பித்தியாவின் வீட்டில் டி.வி. இல்லாததால் தனது 11 வயது வரை அஸ்வினின் பந்து வீச்சை பார்த்ததில்லை. 2013-ம் ஆண்டில் முதல்முறையாக அஸ்வினின் பந்து வீச்சை பார்க்கும் வாய்ப்பை பெற்ற அவர் அதில் இருந்து அவரை தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, அவரை போலவே பந்து வீச பழகினார். இப்போது கிட்டத்தட்ட அவரை போன்றே பந்துவீசுகிறார். வலை பயிற்சியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையாக குடைச்சல் கொடுத்து, அவர்களை தயார்படுத்த உதவுகிறார்.
இது பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், 'இந்திய பயணத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் பயிற்சி பகுதியில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு வலை பயிற்சி பவுலர் இருக்கிறார். பித்தியா என்ற அந்த பவுலர் எங்களுக்கு அஸ்வினின் நகலாக தோன்றுகிறார். முதல் நாள் பயிற்சியில் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. உள்ளூர் வலைபயிற்சி பவுலர்களில் பித்தியா தனித்துவம் வாய்ந்தவராக தென்பட்டார். ஏனெனில் நாள் முழுவதும் சோர்வின்றி தொடர்ச்சியாக பந்து வீசிய அவர் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களை தனது சுழல் ஜாலத்தால் தடுமாற வைத்தார்.
அஸ்வின் போன்று துல்லியமாக பந்து வீசி சவால் அளிக்கக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் உலகில் யாரும் கிடையாது. ஆனாலும் வரும் நாட்களில் பித்தியாவின் பந்து வீச்சை தொடர்ச்சியாக சந்திக்கும் போது, உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சை கணித்து எதிர்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும். இரண்டு வாரத்திற்கு முன்பு விதர்பா ஸ்டேடியத்தில் நடந்த ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா அணிக்கு எதிராக 73 ரன் இலக்கை இலக்கை நோக்கி ஆடிய குஜராத் 54 ரன்னில் சுருண்டதும், அதில் 9 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியதையும் கவனத்தில் கொண்டுள்ளோம்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பித்தியாவை தவிர்த்து பேட்ஸ்மேனை நோக்கி பந்தை ஓங்கி வேகமாக எறியும் (துரோ பயிற்சி உதவியாளர்) பிரதேஷ் ஜோஷி, ஐதராபாத்தை சேர்ந்த இடக்கை சுழற்பது வீச்சாளர் மேரோத்ரா ஷசாங் ஆகிய இந்தியர்களும் ஆஸ்திரேலியாவின் பயிற்சிக்கு உதவிடும் வகையில் முகாமில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.