ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சூர்யாவுக்கு இடமில்லை - இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்...!
ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.
2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களை தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.
அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஸ்ரேய்ஸ் அய்யர் ஆட மாட்டார் என தெரிகிறது. அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவா அல்லது சுப்மன் கில்லா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவனை இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்த அணியில் ஸ்ரேய்ஸ் அய்யர் இடத்தில் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார். மேலும் 3 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவுக்கு அவர் அணியில் இடம் கொடுக்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக வாசிம் ஜாபர் தேர்வு செய்த அணியின் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.