இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் - பெங்களூரு அணி கேப்டன் மந்தனா பேட்டி


இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் - பெங்களூரு அணி கேப்டன் மந்தனா பேட்டி
x

image courtesy: WPL via ANI

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி அடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா கூறுகையில், 'நாங்கள் 2-வது சீசனில் தான் விளையாடுகிறோம். எனவே ஐ.பி.எல். போட்டியில் எங்களது ஆண்கள் அணிக்கு என்ன நடந்தது (ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி கடந்த 16 ஆண்டில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை) என்பதை எங்களோடு தொடர்புபடுத்தி பார்த்து அதிக நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தை பற்றி நினைக்காமல் தற்போது நம் முன்பு இருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்பதை கிரிக்கெட் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.

குறிப்பிட்ட நாளில் யார் சரியாக செயல்படுகிறார்கள் என்பது தான் முக்கியமானதாகும். இன்று யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். கடந்த ஆண்டு எங்களுக்கு நன்றாக அமையவில்லை. இந்த சீசனில் நாங்கள் எங்களது செயல்முறையில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன், நல்ல பயிற்சியும் எடுத்து இருக்கிறோம். நாங்கள் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம்' என்றார்.

டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் இறுதிப்போட்டிக்கு நல்ல நிலையில் செல்கிறோம். வரும் போட்டியில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த தொடரில் பெங்களூரு அணி நன்றாக விளையாடியது. அவர்கள் எங்களுக்கு சவால் அளிப்பார்கள். வெற்றிக்கு தேவையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கடந்த ஆண்டு என்ன நடந்தது என்பதை பற்றி நான் நினைக்கவில்லை. இன்று என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம். மீண்டும் கிடைத்து இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்போம்' என்றார்.


Next Story