பாகிஸ்தான் மாதிரி இல்ல.. இந்தியாவில் பந்து அதிகமாக சுழல்கிறது - இங்கிலாந்து வீரர் பேட்டி


பாகிஸ்தான் மாதிரி இல்ல.. இந்தியாவில் பந்து அதிகமாக சுழல்கிறது - இங்கிலாந்து வீரர் பேட்டி
x

Image Courtesy: AFP

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வந்த இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஜடேஜா 87 ரன் எடுத்த நிலையில் ரூட் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய பும்ரா டக் அவுட் ஆனார். இதையடுத்து முகமது சிராஜ் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 87 ரன், ராகுல் 86 ரன், ஜெய்ஸ்வால் 80 ரன் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாக் க்ராவ்லி அளித்த பேட்டியில் கூறியதாவது,

முதல் நாளிலிருந்தே பந்து சுழன்றதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம். நாங்களும் அதில் இன்று 3 விக்கெட்களை எடுப்போம் என்று நம்புகிறேன். நான் உலகம் முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இந்த போட்டிக்காக நான் தயாராக வந்துள்ளதாக கருதுகிறேன். நான் பாகிஸ்தானில் விளையாடியுள்ளேன். அங்கேயும் இங்கேயும் சூழ்நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

ஆனால் இந்தியாவில் பந்து சற்று அதிகமாகவே சுழல்கிறது. பாகிஸ்தானில் பந்து வழுக்கி கொண்டு ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. ஆனால் இந்தியாவில் ஸ்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொண்டோம். எனவே அதற்கு தகுந்தார்போல் என்னுடைய பயிற்சியில் கவனம் செலுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story