ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; அஸ்வின், சுந்தருக்கு பதிலாக இவரை அணியில் எடுத்திருக்கலாம் - ஹர்பஜன் சிங்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; அஸ்வின், சுந்தருக்கு பதிலாக இவரை அணியில் எடுத்திருக்கலாம் - ஹர்பஜன் சிங்
x

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரு போட்டிகளுக்கு ஒரு அணியும், கடைசி போட்டிக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆசிய கோப்பை தொடரில் காயம் அடைந்த அக்சர் படேல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு 3வது ஆட்டத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டத்துக்கான அணியில் இடம் பெறாத அக்சர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அக்சர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அணியில் எடுத்ததற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலை சேர்த்து இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

யுஸ்வேந்திர சாஹல் ஏற்கனவே ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்துள்ளார். எந்த ஒரு வீரருக்கு பதிலாகவும் அவர் அணியில் தேர்வு செய்யப்பட தகுதியான ஒரு வீரர். என்னை பொறுத்தவரை அக்சர் படேலுக்கு பதிலாக அவரே இந்திய அணியில் தேர்வாகி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணிக்காக இதுவரை 72 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story