அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி...!
இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது போட்டி சட்டோகிராமில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
சைல்ஹெட்,
அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அயர்லாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று நடந்தது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 28.1 ஓவர்களில் 101 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 36 ரன்னும், லார்கான் டக்கெர் 28 ரன்னும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் மக்முத் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், எடாபத் ஹூசைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 13.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் தமிம் இக்பால் 41 ரன்னும் (41 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), லிட்டான் தாஸ் 50 ரன்னும் (38 பந்து, 10 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
32 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் அள்ளிய வங்காளதேச பவுலர் ஹசன் மக்முத் ஆட்டநாயகன் விருதும், விக்கெட் கீப்பர் மிஷ்பிகுர் ரஹிம் (மொத்தம் 144 ரன்கள்) தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. முதலாவது ஆட்டத்தில் அந்த அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது போட்டி சட்டோகிராமில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.