பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 47 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
கராச்சி,
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்து இருந்தது. டாம் பிளன்டெல் 30 ரன்னுடனும், சோதி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சோதி 11 ரன்னிலும், டாம் பிளன்டெல் 51 ரன்னிலும் போல்டு ஆனார்கள். கடைசி விக்கெட் இணையான அஜாஸ் பட்டேல் (35 ரன்கள்), மேட் ஹென்றி (ஆட்டம் இழக்காமல் 68 ரன்கள்) ஆகியோர் 104 ரன்கள் திரட்டினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 131 ஓவர்களில் 449 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய முடிவில் 47 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 19 ரன்னிலும், ஷான் மசூத் 20 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 74 ரன்னுடனும், சாத் ஷகீல் 13 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.