உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து பாகிஸ்தான் சாதனை...!
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 344 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷாபீக் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் சதத்தால் 48.2 ஓவரில் 345 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது, 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த அணி என்ற புதிய சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 328 ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பாகிஸ்தான் நேற்று முறியடித்தது.