பாலஸ்தீன ஆதரவு கோஷம்; விதிமீறல்... விராட் கோலியை கட்டி பிடித்த நபரால் பரபரப்பு


பாலஸ்தீன ஆதரவு கோஷம்; விதிமீறல்... விராட் கோலியை கட்டி பிடித்த நபரால் பரபரப்பு
x

அந்த நபர் பாலஸ்தீன ஆதரவு வாசகங்கள் கொண்ட டி-சர்ட் அணிந்தபடி காணப்பட்டார்.

ஆமதாபாத்,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் ஆவலாக பார்த்து வருகின்றனர். கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், போட்டியின் தொடக்கத்தில் 14-வது ஓவரின்போது, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்த நபர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டு, போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் விராட் கோலியை கட்டி பிடிக்கவும் செய்திருக்கிறார்.

எனினும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை அழைத்து சென்றனர். பாதுகாப்பை மீறி நுழைந்த நபர் கூறும்போது, என்னுடைய பெயர் ஜான். ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறேன். விராட் கோலியை சந்திப்பதற்காக மைதானத்திற்குள் நுழைந்தேன். பாலஸ்தீனத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன் என கூறினார்.

அந்த நபர் பாலஸ்தீன ஆதரவு வாசகங்கள் கொண்ட டி-சர்ட் அணிந்தபடி மற்றும் பாலஸ்தீன கொடி நிறத்திலான முகமூடியையும் அணிந்து கொண்டு வந்துள்ளார். அவரை ஆமதாபாத்தில் உள்ள சந்தேகெடா காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story