ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: வலுவான நிலையில் மத்தியபிரதேச அணி


ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: வலுவான நிலையில் மத்தியபிரதேச அணி
x

யாஷ் துபே, சுபம் ஷர்மா தொடர்ந்து நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை-மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் சேர்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்தியபிரதேச அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து இருந்தது. யாஷ் துபே 44 ரன்னுடனும், சுபம் ஷர்மா 41 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. யாஷ் துபே, சுபம் ஷர்மா தொடர்ந்து நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். யாஷ் துபே 234 பந்துகளில் தனது 3-வது முதல்தர போட்டி சதத்தை சதத்தை எட்டினார். மறுமுனையில் தனது 7-வது முதல்தர போட்டி சதத்தை அடித்த சுபம் ஷர்மா 116 ரன்னில் (215 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) மொகித் அவாஸ்தி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோரிடம் சிக்கினார். யாஷ் துபே தனது பங்குக்கு 133 ரன்கள் (336 பந்து, 14 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மத்தியபிரதேச அணி 123 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. 6 ரன் மட்டுமே பின்தங்கி இருக்கும் மத்தியபிரதேச அணி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவது உறுதியாகி விட்டது. இதன் மூலம் அந்த அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.


Next Story