ரஞ்சி கிரிக்கெட்: 4 விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோர், அஜித் ராம் - வெற்றியின் விளிம்பில் தமிழகம்


ரஞ்சி கிரிக்கெட்: 4 விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோர், அஜித் ராம் - வெற்றியின் விளிம்பில் தமிழகம்
x
தினத்தந்தி 4 Feb 2024 11:18 PM GMT (Updated: 5 Feb 2024 12:06 AM GMT)

2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

கோவா,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள்4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. தமிழ்நாடு- கோவா இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) கோவா கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே கோவா 241 ரன்களும், தமிழகம் 273 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய கோவா அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த கோவா 65.5 ஓவர்களில் 168 ரன்னில் முடங்கியது. தொடக்க வீரர் சுயாஷ் பிரபுதேசாய் (79 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தமிழகம் தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களான கேப்டன் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதன்மூலம் தமிழகத்திற்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 4 ரன்னில் போல்டானார். சுரேஷ் லோகேஷ்வர் (34 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (22 ரன்) களத்தில் உள்ளனர். தமிழகத்தின் வெற்றிக்கு இன்னும் 76 ரன் மட்டுமே தேவைப்படுவதால் கடைசி நாளான இன்று அதை எளிதில் எடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே பிரிவில் சூரத்தில் நடந்த ரெயில்வேக்கு எதிரான லீக்கில் 226 ரன் இலக்கை கர்நாடகா அணி 82.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் (121 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 3-வது நாளான நேற்று 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வேகப்பந்து வீச்சாளர் மொகித் அவாஸ்தி 7 விக்கெட்டுகளை அள்ளினார். 5-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது 4-வது வெற்றியாகும்.


Next Story