ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் சதம் - தமிழக அணி 273 ரன்கள் சேர்ப்பு


ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் சதம் - தமிழக அணி 273 ரன்கள் சேர்ப்பு
x

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் சதத்தால் தமிழக அணி 273 ரன்கள் சேர்த்தது.

கோவை,

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) ஆந்திராவை எதிர்கொண்டது. கோவையில் உள்ள எஸ்.என். ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திரா 100.1 ஓவர்களில் 297 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர், சந்தீப் வாரியர் தலா 3 விக்கெட்டும், விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 113 ரன்னிலும், பாபா அபராஜித் 88 ரன்னிலும் வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் (7 ரன்), விஜய் சங்கர் (0) களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இதே பிரிவில் மும்பையில் நடக்கும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 457 ரன்கள் திரட்டி இருந்தது. கேப்டன் ரஹானே 139 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 40 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்த ரஹானே 204 ரன்னில் போல்டு ஆனார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 127.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 651 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சதம் விளாசிய சர்ப்ராஸ் கான் 126 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி நேற்றைய முடிவில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

டெல்லி கர்னைல் சிங் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 48.1 ஓவர்களில் 162 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய ரெயில்வே அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று தொடர்ந்து ஆடிய ரெயில்வே அணி 150 ரன்னில் சுருண்டது. 12 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் களம்கண்ட பஞ்சாப் 8 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஆடுகளத்தில் பந்து திடீரென தாறுமாறாக எகிறுவதும், சில சமயங்களில் மிகவும் தாழ்வாக செல்வதும் என்று கணிக்க முடியாத அளவுக்கு காணப்பட்டது. இதனால் இரு அணியின் கேப்டன்களுடன் ஆலோசனை நடத்திய நடுவர்கள் ஆடுகளம் அபாயகரமானதாகவும், ஆடுவதற்கு உகந்ததாகவும் இல்லை என்று அறிவித்தனர்.

இந்த போட்டியை மற்றொரு ஆடுகளத்தில் 2 நாள் ஆட்டமாக புதிதாக 'டாஸ்' போட்டு நடத்தப்படுகிறது. அணிகள் தங்களது ஆடும் லெவன் அணியை மாற்றுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story