ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நெருங்கிய சவுராஷ்டிரா, பெங்கால் அணிகள்...!


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நெருங்கிய சவுராஷ்டிரா, பெங்கால் அணிகள்...!
x

Image Courtesy: @BCCIdomestic

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது.

இந்தூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் அணி 438 ரன்னும், மத்தியபிரதேச அணி 170 ரன்னும் எடுத்தன. 268 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாளில் 2 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. சுதீப் குமார் கராமி 12 ரன்னுடனும், அனுஸ்டப் மஜூம்தார் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து 547 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதிகபட்சமாக அனுஸ்டப் மஜூம்தார் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிரதிப்தா பிராம்னிக் 60 ரன்னுடன் களத்தில் உள்ளார். மத்தியபிரதேசம் தரப்பில் சரன்ஷ் ஜெயின் 6 விக்கெட்டும், குமார் காத்திகேயா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

கர்நாடகா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் அர்பித் வசவதா 112 ரன்னுடனும், சிராக் ஜானி 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி 527 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அர்பித் வசவதா 202 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 55 ரன்னில் அவுட் ஆனார். நிகின் ஜோஸ் 54 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ள சவுராஷ்டிரா, பெங்கால் அணிகள் இறுதிப்போட்டியை நெருங்கியது.



Next Story