ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணியை வீழ்த்தி மத்தியபிரதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணியை வீழ்த்தி மத்தியபிரதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

மத்தியபிரதேசம் வெற்றி

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால்-மத்திய பிரதேச அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மத்தியபிரதேசம் 341 ரன்களும், பெங்கால் 273 ரன்களும் எடுத்தன. 68 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 281 ரன்னில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 52 ரன்களுடனும், அனுஸ்துப் மஜூம்தார் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி, மத்தியபிரதேச வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 65.2 ஓவர்களில் 175 ரன்னில் அடங்கியது. இதனால் மத்தியபிரதேச அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 78 ரன்கள் சேர்த்தார். மத்தியபிரதேச அணி தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கவுரவ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மத்தியபிரதேச அணி 1998-99-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மும்பை அணி முன்னேற்றம்

உத்தரபிரதேசத்துக்கு எதிரான மற்றொரு அரைஇறுதியில் முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. 213 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 449 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாள் இரவில் பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததால் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 533 ரன்கள் குவித்து மொத்தம் 746 ரன்கள் முன்னிலையில் இருந்த போது 'டிக்ளேர்' செய்தது. அத்துடன் ஆட்டம் 'டிரா'வில் முடித்து கொள்ளப்பட்டது. சர்ப்ராஸ் கான் 59 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டம் 'டிரா'வில் முடிந்தாலும் மும்பை அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் இறுதிசுற்றை எட்டியது. 41 முறை சாம்பியனான மும்பை அணி 2016-17-ம் ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இறுதிப்போட்டி

ரஞ்சி கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதில் மும்பை-மத்தியபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story