'ரோகித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன், அவரது ஆட்டம் இந்த தொடரில் மிகச்சிறப்பாக இருக்கிறது' - ஸ்ரேயாஸ் ஐயர்
உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மும்பை,
நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
இதில் நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை அடித்து இருந்தாலும் நான்காவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அவருக்கு இணையாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக ரன்களின் எண்ணிக்கையை விரைவாக உயர்த்திய அவர் 70 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் என 105 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில்;-
'இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே எங்களுக்கு நல்ல அதிரடியான துவக்கத்தை கொடுத்ததால் பின்னால் வந்த எங்களால் அவர் விட்ட இடத்தில் இருந்து கொண்டு செல்ல முடிந்தது. ரோகித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன், அவரது ஆட்டம் இந்த தொடரில் மிகச்சிறப்பாக இருக்கிறது. அதோடு அவர் கொடுக்கும் நம்பிக்கையும் எங்களை திறம்பட செயல்பட வைக்கிறது. இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் என அனைவருமே என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த உலகக்கோப்பை தொடரை நான் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை.
அந்த நேரத்தில் என்னிடம் பேசிய ரோகித்;- ' நீ வெளியில் இருந்து வரும் கருத்துகளை பற்றி எதையும் நினைக்க வேண்டாம். நாங்கள் உன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். நீ களத்திற்கு சென்று உன்னுடைய திறமையை வெளிப்படுத்தினால் போதும் என்று என்னை ஆதரித்தார்.
அதன் காரணமாகவே நான் அடுத்தடுத்த போட்டிகளில் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். தற்போதுள்ள இந்திய அணியில் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருக்கிறது. நமது அணியில் தற்போது அனைவருமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்' என்று கூறியுள்ளார்.