2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி விளையாட வேண்டுமா..? - கங்குலி அளித்த பதில்


2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி விளையாட வேண்டுமா..? - கங்குலி அளித்த பதில்
x

Image Courtesy: AFP

இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20 போட்டியில் கடந்து 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடினர்.

இதையடுத்து இருவரும் எவ்வித டி20 போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர்கள் விளையாடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. இதையடுத்து எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாட இருவருமே விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக வரும் 11ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரிலேயே அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

இந்திய அணி ஒரு சிறந்த அணி. நமது அணி தோற்றால் உடனே குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் வெற்றியை யாரும் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. என்னை பொறுத்தவரை இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் முக்கிய வெற்றிகள் அதிர்ஷ்டம் இல்லாமல் தவறவிடப்படுகிறது.

அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்ல தகுதியான ஒரு அணி. அதோடு இந்த டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டும். அதேபோன்று அனுபவ வீரரான விராட் கோலியும் அந்த தொடரில் இடம்பிடித்து விளையாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story