மாயாஜாலம் காட்டிய சோபி டிவினி... குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அதிரடி வெற்றி...!
இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 16-வது 'லீக்' ஆட்டம் மும்பையில் உள்ள பிரா போர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக லாரா ஆல்வர்ட் 68 ரன்களும் ஆஷ்லே கார்ட்னர் 41 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியில் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 189 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.
பெங்களூரு அணியில் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் சோபி டிவினி களமிறங்கினர். மந்தனா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியுடன் ஜோடி சேர்ந்த சோபி டிவினி அதிரடியாக ஆடினார். அவர் சிக்சர்களும் பவுண்டரிகளும் பறக்க விட்டார். 36 பந்துகளில் 8 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் விளாசிய சோபி டிவினி 99 ரன்னில் அவுட் ஆனார்.
கிம் ஹர்த் வீசிய பந்தில் பவுண்டரி விளாச முயற்சித்தபோது அஸ்வினியிடம் கேட்ச் கொடுத்து சோபி டிவினி சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்டார். எல்லிஸ் பெர்ரி 19 ரன்களும் ஹீதர் நைட் 22 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 15.3 ஓவரில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.