தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்; ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் சுமித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் விலகல்


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்; ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் சுமித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் விலகல்
x

image courtesy; AFP

தினத்தந்தி 18 Aug 2023 10:02 AM GMT (Updated: 18 Aug 2023 11:09 AM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் சுமித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 30ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து காயத்தால் ஸ்டீவ் சுமித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளனர். ஸ்மித்திற்கு இடது மணிக்கட்டில் தசைநாரில் காயம் எற்பட்டுள்ளது. அது குணமடைய நான்கு வாரங்கள் ஆகும் என தெரிகிறது. அதனால் அவர் இந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஆஷஸ் தொடர் முடிவடைந்ததில் இருந்து இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவரும் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஸ்மித் மற்றும் ஸ்டார்க் இருவரும் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு முன் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா தொடருக்கான டி20 அணியில் ஸ்மித்துக்கு பதிலாக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டுள்ளார். அதே சமயம் ஒருநாள் அணியில் ஸ்மித் மற்றும் ஸ்டார்க் இருவருக்கும் பதிலாக மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டின் போது, பீல்டிங் செய்கையில் இடது மணிக்கட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கேப்டன் கம்மின்சுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கம்மின்ஸ் இந்த தொடரின் இறுதியில் தான் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story