ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; ரோகித்துடன் இவரை தொடக்க வீரராக களம் இறக்குங்கள் - இந்திய முன்னாள் வீரர்


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; ரோகித்துடன் இவரை தொடக்க வீரராக களம் இறக்குங்கள் - இந்திய முன்னாள் வீரர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 Jan 2024 7:03 AM IST (Updated: 10 Jan 2024 8:35 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். அந்த நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் போது ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் கிரண் மோரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

என்னை பொறுத்த வரை தொடக்கவீரராக ஜெயஸ்வால் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் விளையாடினால் உங்களுக்கு இடது-வலது கை பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங் ஜோடியாக கிடைப்பார்கள். சமீபத்திய போட்டிகளில் ஜெய்ஸ்வால் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது.

குறிப்பாக முதல் பந்திலிருந்தே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிக்கும் அவரிடம் டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான ஆக்ரோஷம் இருக்கிறது. மறுபுறம் சுப்மன் கில் நல்ல வீரராக இருக்கிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் நான் எப்போதும் இடது-வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையாக விளையாடுவதை தேர்வு செய்வேன்.

மிடில் ஆர்டரில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவருமே விளையாட வேண்டும். ரிங்கு போலவே திலக் வர்மாவும் 360 டிகிரியில் அடிக்கக் கூடியவர். நாம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த இருவருக்குமே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.

மேலும் கடந்த தொடரில் அசத்திய அர்ஷிதீப் சிங் இடது கை பவுலராக இருக்கிறார். முன்னேற்றத்தை சந்தித்து வரும் அவரைப் போன்ற இடது கை பவுலர்கள் போட்டியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story