டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? வெளியான தகவல்


டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? வெளியான தகவல்
x

image courtesy: PTI

தினத்தந்தி 17 April 2024 12:15 PM IST (Updated: 17 April 2024 12:28 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

முன்னதாக இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்பதால் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.

இதில் விராட் கோலியை, ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story