ஜடேஜாவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் - சர்பராஸ் கான் பேட்டி


ஜடேஜாவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் - சர்பராஸ் கான் பேட்டி
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 15 Feb 2024 4:09 PM GMT (Updated: 15 Feb 2024 4:19 PM GMT)

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கில் ரன் எதுவும் அடிக்காமலும், படிதார் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ரோகித் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். ரோகித் 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ரோகித்துக்கு பின் களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விரைவாக அரைசதம் அடித்து அசத்திய அவர் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட் ஆனார். இருப்பினும் இதெல்லாம் சகஜம் என்று தெரிவிக்கும் சர்பராஸ் கான் இப்போட்டியில் 62 ரன்கள் அடிக்க முக்கிய ஆலோசனை தெரிவித்த ஜடேஜாவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என்ற வகையில் கூறியுள்ளார்.

இது குறித்து பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "இப்படி தவறான புரிதலால் அவுட்டாவது விளையாட்டின் ஒரு அங்கம். இப்படி நடப்பது சகஜம். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார். குறிப்பாக களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை சொன்னார். அதற்கு அவருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். இறுதியில் தவறான புரிதலால் ரன் அவுட்டானதற்கு அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். எனவே அது பரவாயில்லை" என்று கூறினார்.


Next Story