நாங்கள் வெற்றி பெற அது முக்கிய காரணமாக அமைந்தது - ரோகித் சர்மா


நாங்கள் வெற்றி பெற அது முக்கிய காரணமாக அமைந்தது - ரோகித் சர்மா
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 18 Feb 2024 8:04 PM IST (Updated: 18 Feb 2024 8:05 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ராஜ்கோட்,

ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (214), சுப்மன் கில் 91 ரன்கள், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற டாஸ் முக்கிய காரணமாக அமைந்ததாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். மேலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் அசத்தியத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது நீங்கள் 2 - 3 நாட்களுக்கு மேல் விளையாடுவதில்லை. நாங்கள் 5 நாட்களும் விளையாடுவதன் முக்கியத்துவத்தை புரிந்துள்ளோம். அதில் நன்றாக விளையாடிய நாங்கள் அழுத்தத்தை எதிரணி மீது போட்டோம்.

எங்களுடைய பந்து வீச்சில் கிளாஸ் இருப்பதால் பொறுமையாக செயல்படுவோம் என்பதே என்னுடைய மெசேஜாக இருந்தது. அந்த வகையில் நாங்கள் 3-வது நாளில் கம்பேக் கொடுத்ததற்கு பெருமையடைகிறேன். அது நடக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய அனுபவத்தைக் கொண்ட ஜடேஜாவுடன் இடது - வலது பேட்ஸ்மேன்கள் கலவையை வேண்டுமென நாங்கள் விரும்பியதால் சர்ப்ராஸ் கானை இறக்கினோம். சர்பராஸ் கான் எப்படி விளையாடுவார் என்பதை நாங்கள் பார்த்தோம்.

அனைத்தையும் நாங்கள் கணக்கிட்டு பின்னர் அதற்கு தகுந்தாற்போல் பேட்டிங் வரிசையில் செயல்பட்டோம். நிறைய திருப்புமுனைகள் இருந்தன. இந்தியாவில் வெல்வதற்கு டாஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். டாசில் வெற்றி பெற்றது முக்கிய காரணமாக அமைந்தது. எங்களுடைய பவுலர்கள் நிறைய போராட்டத்தை காண்பித்தனர். இந்த நேரத்தில் முக்கிய பவுலர்கள் இல்லாமல் நாங்கள் விளையாடினோம் என்பதை மறக்கக்கூடாது.

பேட்டிங்கிலேயே பாதி வேலை முடிந்தது என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக இந்த இரண்டு இளம் வீரர்கள் அசத்தினார்கள். ஜடேஜா 2-வது இன்னிங்சில் சூப்பராக பந்து வீசினார். ஜெயஸ்வால் பற்றி நான் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நிறைய பேசி விட்டேன். அவரைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. கேரியரை உச்சமாக துவங்கியுள்ள நல்ல வீரரான அவர் தொடர்ந்து இதேபோல விளையாட விரும்புகிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story