அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டனர் - கம்பீர்


அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டனர் - கம்பீர்
x

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் பயன்படுத்துவதால் அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டதாக கம்பீர் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப கிரிக்கெட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை கூட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பெல்லாம் பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே சரிசமமாக போட்டியிடும் அளவுக்கு விதிமுறைகள் இருந்தன.

அதனாலேயே அந்த காலகட்டங்களில் பேட்ஸ்மேன்கள் 50 ஓவரில் 250 ரன்கள் அடிப்பது கூட மிகவும் கடினமான இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் 50 ஓவர்களில் எளிதாக 400 - 450 ரன்கள் அடிக்கப்படுகின்றன. அதன் காரணமாக நவீன கிரிக்கெட்டில் பவுலர்களின் நிலைமை மோசமாகி வருகிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் பயன்படுத்துவதால் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டதாக கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"2 புதிய பந்துகள் பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நடந்த மோசமான விஷயம் என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் எவ்வளவு விரல் ஸ்பின்னர்கள் விளையாடுகிறார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இங்கே லயன் மற்றும் அஸ்வின் தலா 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒருநாள் அணியின் அங்கமாக இல்லை. இதற்கான காரணம் என்னவெனில் அவர்களைப் போன்ற ஸ்பின்னர்களுக்கு இங்கே எந்த உதவியும் கிடைப்பதில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த ஒருவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதை நினைத்து பாருங்கள். ஏனெனில் அவர்களுக்கு விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேபோல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் என்பது முற்றிலுமாக காணாமல் போய் விட்டது. எனவே நான் ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க விரும்புகிறேன். பேட்ஸ்மேன்கள் சவாலை சந்திப்பதை பார்க்க விரும்புகிறேன். 150 கிலோமீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்து வீசக்கூடிய ஒருவரை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் என்பது நீக்கப்பட வேண்டிய விதிமுறை" என்று கூறினார்.


Next Story