முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x

Image Courtacy: ICCTwitter 

இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

உலகக் கோப்பை தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். இதையடுத்து புதிய டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாகிஸ்தான் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுவது இது 14-வது முறையாகும். ஆனால் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இன்னும் சொல்லப்போனால் 1995-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்டில் கூட வென்றதில்லை. அங்கு கடைசியாக ஆடிய 14 டெஸ்டுகளில் தொடர்ச்சியாக தோல்வி கண்டிருக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் ஷான் மசூத், முன்னாள் கேப்டன் பாபர் அசாம், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான் ஆகியோரைத் தான் பாகிஸ்தான் பேட்டிங்கில் மலைபோல் நம்பி இருக்கிறது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் உள்ளூர் ரசிகர்கள் முன் களம் காண்கிறது. அதிகமான புற்களுடன் கூடிய பெர்த் ஆடுகளத்தில் வேகத்துடன் பவுன்சும் தாறுமாறாக இருக்கும். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சாதனையின் விளிம்பில் உள்ளார். இன்னும் 4 விக்கெட் வீழ்த்தினால் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய 3-வது ஆஸ்திரேலிய பவுலர் என்ற பெருமையை பெறுவார்.

டிராவிஸ் ஹெட், கவாஜா, ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், லபுஸ்சேன் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். வார்னர் இந்த தொடருடன் டெஸ்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருப்பதால் ரன் குவித்து ரசிகர்களை மகிழ்விக்கும் வேட்கையுடன் உள்ளார்.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த போட்டி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெற்றியோடு தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டுவார்கள் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ் அல்லது கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலன்ட்.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சாத் ஷகில், சர்ப்ராஸ் அகமது அல்லது ஆஹா சல்மான், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹசன் அலி, நமன் அலி.


Next Story