இறுதிப்போட்டியில் இந்திய அணியினர் பேட்டிங்கில் கொஞ்சம் கூட அதிரடியாக விளையாடவில்லை- கவுதம் கம்பீர் அதிருப்தி


இறுதிப்போட்டியில் இந்திய அணியினர் பேட்டிங்கில் கொஞ்சம் கூட அதிரடியாக விளையாடவில்லை- கவுதம் கம்பீர் அதிருப்தி
x

image courtesy; PTI

தினத்தந்தி 22 Nov 2023 5:16 AM GMT (Updated: 22 Nov 2023 5:21 AM GMT)

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது.

புதுடெல்லி,

உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஆடியது. 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஏற்கனவே 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியினர் பேட்டிங்கில் கொஞ்சம் கூட அதிரடியாக விளையாடவில்லை என்று கவுதம் கம்பீர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சற்று தைரியமாக அதிரடியாக விளையாட முயற்சித்து 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தால் கூட பரவாயில்லை என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"எப்போதுமே மிகவும் தைரியமான அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று நான் சொல்வேன். சில நேரங்களில் நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் 11 - 40 ஓவர்கள் என்பது மிகவும் பெரிய இடைவெளியாகும். அங்கே ஏதோ ஒரு சமயத்தில் இந்தியா அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும். எப்போதும் நான் டாப் 6 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதை விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் அதை பின்பற்றி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 240 ரன்கள் அடித்த நீங்கள் அதை வைத்துக்கொண்டு வெற்றிக்கு போராட முடியாது.

நீங்கள் அதிரடியாக விளையாடினால் வெற்றி உங்கள் பக்கம் வரும் இல்லையேல் எதிர்பக்கம் செல்லும். இதுவே ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக இருக்கிறது. ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும் அந்த சூழலில் விராட் கோலி நங்கூரமாக நின்று விளையாடுவார் என்பதால் எஞ்சிய வீரர்கள் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும். ஒரு ஓவரில் 5 ரன்கள் எடுப்பது நேர்மறையான விளையாட்டாகும். ஆனால் நீங்கள் இந்த ஆட்டத்தில் ஒரு ஓவருக்கு 4 – 5 பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை" என்று கூறினார்.


Next Story