உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக வயதில் சதம் அடித்த வீரர்...!
உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.
தர்மசாலா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் வங்காளதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி டேவிட் மலானின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 364 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய வங்காளதேச அணி 48.2 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதம் அடித்து அசத்திய டேவிட் மலான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் மலான் படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 15 வீரர்கள் 19 சதங்களை அடித்துள்ளனர். இதில் அதிக வயதில் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் தான். அவரது வயது 36 ஆண்டு 37 நாட்கள். இதற்கு முன்பு கிரஹாம் கூச் தனது 34 வயதில் சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்து டேவிட் மலான் புதிய சாதனை படைத்துள்ளார்.