சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த இலங்கை அணி வீரர்
இலங்கை அணியின் பேட்ஸ்மேன் லஹிரு திரிமான்னே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு,
இலங்கை அணியின் தொடக்க வீரரான லஹிரு திரிமான்னே (வயது 33) தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். திரிமான்னே 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 2014ஆம் ஆண்டு இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்ற போது அந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் அங்கம் வகித்தார்.
அவர் இறுதியாக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருட காலமாக அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் "ஒரு வீரராக நான் எனது சிறந்த ஆட்டத்தை வழங்கினேன். என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். விளையாட்டிற்கு மதிப்பளித்துள்ளேன். எனது தாய்நாட்டிற்கு எனது கடமையை நேர்மையாகவும் முறையாகவும் செய்துள்ளேன். இது கடினமான முடிவு. இந்த முடிவை எடுக்க என்னைப் பாதித்த காரணங்களை என்னால் இங்கு குறிப்பிட முடியாது. மேலும் எனக்கு ஆதரவளித்த இலங்கை அணியின் உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், அணியினர், பிசியோக்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் நன்றி " என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,'நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றதற்கு நன்றி. மேலும் 13 வருட அற்புதமான நினைவுகளுக்கு மிக்க நன்றி மற்றும் எனது பயணம் முழுவதும் என்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி'எனப் பதிவிட்டுள்ளார்.