இதுவே எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் - இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர்


இதுவே எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் - இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர்
x

image courtesy: PTI

நடப்பு ஐ.பி.எல். தொடர்தான் எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் எம்.எஸ். தோனி ஒப்படைத்து விட்டார். கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்தியாவைப்போலவே சி.எஸ்.கே. அணியையும் சிறப்பாக வழி நடத்தி 5 கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இருப்பினும் 42 வயதை கடந்து விட்ட அவர் சென்ற வருடமே லேசான முழங்கால் வலியுடன் விளையாடினார். எனவே காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 2022-ல் ஜடேஜா கேப்டனாக செயல்பட்டபோது தோனி முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதிகமாக தலையிட்டதாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் தற்போது எந்த தலையீடும் செய்யாமல் அனைத்து முடிவுகளையும் ருதுராஜ் எடுப்பதற்கு அனுமதிக்கும் தோனி ஓரமாக ஒதுங்குவதை பார்க்க முடிவதாகவும்ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே இது தான் அவருடைய கடைசி ஐபிஎல் தொடர் என்று உறுதிப்பட வெளிப்படையாக தெரிவிக்கும் ரவி சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இதுவே எம்.எஸ். தோனியின் கடைசி சீசன். தன்னுடைய உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதற்கு தகுந்தாற்போல் அவர் இந்த சீசன் முழுவதும் விளையாடுகிறாரா அல்லது பாதி மட்டுமே விளையாடுவாரா என்பது பற்றி காலம் பதில் சொல்லும். ஆனால் தற்போது தோனி எடுத்துள்ள முடிவு "ருதுராஜ் கையில் பாதியிலேயே வேலையை ஒப்படைக்க விரும்பவில்லை. அனைத்தையும் பின்னால் இருந்து பார்க்கிறேன். தேவைப்பட்டால் உதவி செய்கிறேன்" என்பதை சொல்கிறது.

குறிப்பாக ஜடேஜா கேப்டனாக இருந்த வருடத்தை விட தற்போது தோனி அதிகமாக பின் செல்கிறார். தண்ணீர் இடைவேளை போன்ற நேரங்களில் மட்டுமே கொஞ்சமாக முக்கிய முடிவுகள் எடுப்பதில் தலையிடுகிறார். அந்த வகையில் ருதுராஜ் தமக்குத் தாமே செயல்படுவதற்கான முழு சுதந்திரத்தையும் தோனி கொடுத்துள்ளார். இம்முறை தோனியின் குறுக்கீடு மிகவும் குறைவாகவே இருப்பதை பார்க்கிறேன்" என்று கூறினார்.


Next Story