2 -வது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னோய்க்கு ரோகித் சர்மா கொடுக்க காரணம் இதுதான்? – ராகுல் டிராவிட் விளக்கம்


2 -வது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னோய்க்கு ரோகித் சர்மா கொடுக்க காரணம் இதுதான்? – ராகுல் டிராவிட்  விளக்கம்
x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

இதில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அந்த நேரத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அப்போது முதல் சூப்பர் ஓவரை ஏற்கனவே முகேஷ் குமார் வீசிவிட்டார் என்பதனால் இரண்டாவது சூப்பர் ஓவரை ஆவேஷ் கான் வீசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்தினை ரவி பிஷ்னோயிடம் கொடுத்தார்.

ரோகித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் மூன்று பந்திகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பிஷ்னோய் இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் நேற்றைய இரண்டாவது சூப்பர் ஓவரின்போது ரவி பிஷ்னோயை ரோகித் சர்மா அழைக்க என்ன காரணம்? என்பது குறித்து போட்டி முடிந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : 'ரோகித் நேற்று ஒரு கேப்டனாக அவருடைய தைரியத்தை நம்பிதான் அந்த முடிவை எடுத்தார். நிச்சயம் இந்த 11 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது என்றாலும் சுழற்பந்து வீச்சாளரால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று ரோகித் சர்மா நினைத்து தைரியமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதேபோன்று ரவி பிஷ்னோய் பேங்க் ஆப் லென்த்தில் இரண்டு சிறப்பான பந்துகளை வீசினார்.

ஒருவேளை அவர் கொஞ்சம் மேலே பந்தினை வீசி இருந்தால் கூட இரண்டு பந்துகளும் சிக்சருக்கு போயிருக்கும். ஆனால் ரவி பிஷ்னோய் கேப்டன் கொடுத்த நம்பிக்கையால் தைரியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று ரோகித் சர்மாவும் இக்கட்டான நேரத்தில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளரால் போட்டியை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் எடுத்த அந்த தைரியமான முடிவு நமக்கு இறுதியில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது' என்று கூறினார்.


Next Story