சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: இணையதள பிரச்சினையால் ரசிகர்கள் அதிருப்தி


சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: இணையதள பிரச்சினையால் ரசிகர்கள் அதிருப்தி
x

ஐ.பி.எல். தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. டிக்கெட் விலை ரூ.1,700, ரூ.4,000, ரூ.4,500, ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்க லீக் ஆட்டத்துக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை PAYTM மற்றும் www.insider.in. ஆகிய இணையதளங்கள் மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. போட்டிக்கான குறைந்தபட்ச விலையிலான டிக்கெட்டை வாங்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முயற்சித்தனர். இதனால் டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியது. இணைய தள பிரச்சினை சிறிது நேரத்தில் சரியானாலும், முன்பதிவு செய்த பலருக்கு வரிசையில் காத்திருப்பதாகவே தகவல் கிடைத்ததே தவிர, டிக்கெட் கிட்டவில்லை. இதனால் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு பலரும் சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ஆர்.அஸ்வின் தனது குடும்பத்தினருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தள பதிவில், ' சேப்பாகத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான ஐ.பி.எல். தொடக்க லீக் ஆட்டத்துக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட் தேவை நிலவுகிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் பார்க்க என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உதவி செய்யுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story