அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக விராட்கோலி, சிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் நிதா தார் தேர்வு


அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக விராட்கோலி, சிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் நிதா தார் தேர்வு
x

image courtesy: ICC twitter

அக்டோபர் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட வாக்களிக்கும் உரிமை படைத்த கமிட்டியினர் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட்கோலி நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்க அதிரடி வீரர் டேவிட் மில்லர், ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே) ஆகியோரை பின்னுக்கு தள்ளி கோலி அதிக வாக்குகள் பெற்றார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் இதுவரை 3 அரைசதம் உள்பட 246 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கும் விராட்கோலி கடந்த மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்னும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்னும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், 'ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் விருது கமிட்டியால் தனித்துவமான வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மிகவும் சிறப்பானதாக உணருகிறேன். அதே போல் அபாரமாக விளையாடி அக்டோபர் மாத விருதுக்கான பட்டியலில் இடம் பெற்று இருந்த மற்ற வீரர்களுக்கும் எனது பாராட்டை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எனது திறமைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அணியின் சக வீரர்களுக்கும் பாராட்டுக்கள்' என்றார்.

சிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தான் ஆல் - ரவுண்டர் நிதா தார் தேர்வாகி இருக்கிறார். கடந்த மாதம் வங்காளதேசத்தில் நடைபெற்ற பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேறியதில் நிதா தார் முக்கிய பங்கேற்றார். ஆசிய போட்டியில் 145 ரன்கள் எடுத்ததுடன், 8 விக்கெட்டுகளும் சாய்த்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த அவர் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோரை வீழ்த்தி விருதை தன்வசப்படுத்தி இருக்கிறார்.


Next Story