மோசமான சாதனையில் சச்சினை முந்தி முதலிடம் பிடித்த விராட் கோலி...!


மோசமான சாதனையில் சச்சினை முந்தி முதலிடம் பிடித்த விராட் கோலி...!
x

image courtesy; AFP

தினத்தந்தி 18 Jan 2024 9:58 AM IST (Updated: 18 Jan 2024 11:59 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

இதில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிவடைந்ததால், தொடர்ந்து 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 2-வது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி டக் அவுட் ஆவது இது 35-வது முறையாகும். இதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் சச்சினுடன் சமனில் இருந்த கோலி தற்போது அவரை முந்தி மோசமான சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. விராட் கோலி - 35 முறை

2. சச்சின் - 34 முறை

3. ரோகித் சர்மா - 33 முறை

மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி, தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆவது (கோல்டன் டக்) இதுவே முதல் முறையாகும்.


Next Story