எதிரணி வீரருடன் வாக்குவாதம்... ஜெய்ஸ்வாலை களத்தில் இருந்து வெளியேற்றிய ரகானே- வைரல் வீடியோ


எதிரணி வீரருடன் வாக்குவாதம்... ஜெய்ஸ்வாலை களத்தில் இருந்து வெளியேற்றிய ரகானே- வைரல் வீடியோ
x

Screengrab from video tweeted by @IndianIdcf

ஜெய்ஸ்வால் எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ரகானே அவரை களத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார்.

கோவை,

துலீப் கோப்பை இறுதி போட்டி கோவையில் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் இறுதி போட்டியில் மேற்கு மண்டலம், தெற்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல அணி 10 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 83.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 128 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்தார்.

அடுத்து 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 71.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் துலீப் கோப்பையை மேற்கு மண்டல அணி கைப்பற்றியது.

மேற்கு மண்டல அணி கோப்பையை வென்றிருந்தாலும், கேப்டன் ரகானே, ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் இடையே களத்தில் இன்று நடந்த விவாதம் ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இன்றைய இறுதி இன்னிங்சின் 50ஆவது ஓவரின்போது, தெற்கு மண்டல அணியின் சார்பாக பேட்டிங் செய்து வந்த ரவி தேஜாவும், ஷார்ட் ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்து வந்த ஜெய்ஸ்வாலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இதை கவனித்த மேற்கு மண்டல கேப்டன் ரகானே, இருவரையும் சமாதானம் செய்துவைத்து, தனது அணி வீரர் ஜெய்ஸ்வாலிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும், ஜெய்ஸ்வால் மீண்டும் ரவி தேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ரகானே அவரை களத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார். தொடர்ந்து, ஜெய்ஸ்வாலும் பெவிலியனை நோக்கி நடையைக் கட்டினார். இருப்பினும், சில ஓவர்களுக்கு பிறகு, அதாவது இன்னிங்ஸின் 65ஆவது ஓவரின்போது, அவர் மீண்டும் களத்திற்கு பீல்டிங் செய்ய களமிறங்கினார்.

போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய ரஹானே, "உங்கள் எதிரணி வீரர்கள், நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை எப்போதும் நீங்கள் மதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே நீங்கள் சில சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் கையாள வேண்டும்" என தெரிவித்தார்.

தனது அணி வீரராக இருந்தாலும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக ஜெய்ஸ்வாலை களத்தில் இருந்து வெளியேறும்படி கூறிய ரகானேவை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.


Next Story