பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா டெஸ்ட்: நடுவர் லிப்டில் சிக்கியதால் தாமதம்


பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா டெஸ்ட்: நடுவர் லிப்டில் சிக்கியதால் தாமதம்
x

image courtesy: cricket.com.au twitter

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 62.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 96.5 ஓவர்களில் 318 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 264 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் 62 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி வீரர்கள் வார்னர் 6 ரன்களிலும், மார்னஸ் லாபுசாக்னே 4 ரன்களிலும், கவாஜா மற்றும் ஹெட் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த சுமித் மற்றும் மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி அணியை நிமிர வைத்தனர்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த நிலையில் 3-வது நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் சுமித் ஆட்டமிழந்தார். தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 62.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்திருந்தபோது, உணவு இடைவேளை முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்டீவன் சுமித் பேட் செய்ய களத்திற்கு வந்தனர். ஆனால் நடுவர்கள் திடீரென பந்து வீசுவதற்கு அனுமதிக்கவில்லை. 3-வது நடுவர் இல்லிங்வொர்த் இன்னும் தனது இருக்கைக்கு வரவில்லை. அதனால் பந்து வீச வேண்டாம் என்று கூறினர்.

அதன் பிறகே இல்லிங்வொர்த் 10 நிமிடங்கள் லிப்டில் சிக்கி தவித்தது தெரியவந்தது. இதனால் இன்னிங்ஸ் சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது.


Next Story