டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் எங்களுக்கு இல்லை - ராகுல் டிராவிட்


டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் எங்களுக்கு இல்லை - ராகுல் டிராவிட்
x

ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர்.

வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் விளையாடுகின்றனர். அதை விட டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா விளையாடும் ஒரே ஒரு டி20 தொடர் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் தங்களுக்கு இல்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் நாங்கள் ஒருநாள் உலகக்கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை. எனவே இந்த டி20 உலகக்கோப்பை சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது. அதாவது இதற்கு தயாராவதற்கு போதுமான நேரம் எங்களிடம் இல்லை.

அதற்காக ஐபிஎல் தொடரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே நாங்கள் ஒன்றாக விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் வீரர்கள் சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராக எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது.

சொல்லப்போனால் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாகவும் எங்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தது. இருப்பினும் இம்முறை எங்களுக்கு அதிக போட்டிகள் கிடைக்கவில்லை. பும்ரா, சிராஜ் ஆகியோர் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இத்தொடரில் விளையாடவில்லை" என்று கூறினார்.


Next Story