நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தவில்லை - தோல்வி குறித்து ராகுல் டிராவிட் கருத்து


நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தவில்லை - தோல்வி குறித்து ராகுல் டிராவிட் கருத்து
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ஐதராபாத்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் 231 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 202 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

எங்களுக்கு சதம் கிடைக்கவில்லை. எங்களது எந்த வீரரும் பெரிய சதம் அடிக்கவில்லை. எனவே ஏதோ ஒரு வழியில் முதல் இன்னிங்ஸில் 70, 80 ரன்களை தவற விட்டோம் என நினைக்கிறேன். 2-வது இன்னிங்ஸ் எப்போதுமே சவாலானதாக இருக்கும். உங்களுக்கு தெரியும். 2-வது இன்னிங்ஸில் எப்போதும் 230 ரன்களை சேசிங் செய்வது அவ்வளவு எளிதல்ல.

பிட்ச் சுழன்றபோது போப் அபாரமான இன்னிங்ஸ் விளையாடினார். நாங்கள் சேசிங் செய்ய முடியாத அளவுக்கு தேவையான ரன்களை இங்கிலாந்துக்கு கொடுத்தார். என்னைப் பொறுத்த வரை அதுதான் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 3-வது நாளில் போப் விளையாடிய விதம் எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. கடினமான பிட்ச்சில் அவர் அதிக ரிஸ்க் கொண்ட ஷாட்டுகளை அடித்தார்.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானம் இருந்தும் நாங்கள் கூடுதலாக 70 ரன்களை எடுக்காமல் விட்டு விட்டோம். நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தவில்லை. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் யாரும் சதமடிக்கவில்லை. இருப்பினும் எங்களுடைய வீரர்கள் பலர் இன்னும் இளமையாக அனுபவமின்றி இருக்கின்றனர். எனவே இது அவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story