கடைசி 2 - 3 ஓவர்களில் சில தவறுகளை செய்தோம், அது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது - ரியான் பராக்


கடைசி 2 - 3 ஓவர்களில் சில தவறுகளை செய்தோம், அது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது - ரியான் பராக்
x

Image Courtesy: X (Twitter)

நன்றாக பந்து வீசிய நடராஜன், புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக் கொடுக்க வேண்டும் என பராக் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 77 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் நிறைய இடங்களில் முன்னேற வேண்டியுள்ளது. நான் என்னுடைய சிறந்த பார்மில் இல்லை. இல்லையென்றால் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்திருப்பேன். எனவே என்னுடைய தவறிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அதை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சிக்க உள்ளேன்.

என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்..? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஒருவேளை சதமடித்திருந்தால் சிறந்தது என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் தோல்வியை சந்தித்த அணியில் இருப்பது நல்ல உணர்வை கொடுக்காது. நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். எங்களுடைய தவறுகளை பற்றி கவலைப்படாமல் செயல்முறையில் கவனம் செலுத்த வேண்டும். இப்போதும் நாங்கள் புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்தில் இருக்கிறோம்.

கடைசி 2 - 3 ஓவர்களில் நாங்கள் சில தவறுகளை செய்தோம். அது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது. அது தான் ஐ.பி.எல் தொடராகும். நாங்கள் எங்களுடைய விக்கெட்டை கொடுத்ததாக நினைக்கவில்லை. நடராஜன் மெதுவான பவுன்சர் பந்துகளை வீசியதால் ஜெய்ஸ்வால் ஸ்கூப் அடிப்பதற்கு முயற்சித்தார். நானும் அவுட்டான பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்தேன். இருப்பினும் அந்த சமயத்தில் நன்றாக பந்து வீசிய நடராஜன், புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story