2022-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய வீரர்கள் யார்?


2022-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய வீரர்கள் யார்?
x

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 31 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 9 அரைசதம், 68 சிக்சருடன் 1,164 ரன்கள் எடுத்து ‘நம்பர் ஒன்’-ஆக திகழ்கிறார்.

புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் முந்தைய 2022-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கிய வீரர்கள் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

டெஸ்ட் கிரிக்கெட்

2022-ம் ஆண்டில் மொத்தம் 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 36 போட்டியில் முடிவு கிடைத்துள்ளது. 7 டெஸ்ட் 'டிரா'வானது. அதிக வெற்றிகளை பெற்ற அணியாக ஆஸ்திரேலியா (7 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிரா) திகழ்கிறது. இந்தியா7 டெஸ்டில் விளையாடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. 87 சதங்கள் அடிக்கப்பட்டன. தனிநபர் அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் டாம் லாதம் 252 ரன்கள் (வங்காளதேசத்துக்கு எதிராக) எடுத்தது சிறந்த ஸ்கோராகும்.

ஒட்டுமொத்த பேட்டிங்கில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 4 சதத்துடன் 1,184 ரன்கள் சேர்த்து முதலிடம் வகிக்கிறார். விக்கெட் சாய்த்ததில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தலா 47 விக்கெட்டுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.

ஒரு நாள் போட்டி

161 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிக வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் ஸ்காட்லாந்து (15 வெற்றி, 6 தோல்வி) முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் (14 வெற்றி, 8 தோல்வி, 2 முடிவில்லை) உள்ளன. வெற்றிக்கணக்கே தொடங்காத ஒரே அணி நெதர்லாந்து தான். அந்த அணி 15 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து 12 ஆட்டங்களில் ஆடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றாலும் நெதர்லாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்திருக்கிறது.

மொத்தம் 81 சதங்கள் பதிவாகின. ஒரே இரட்டை சதமாக வங்காளதேசத்துக்கு எதிராக இந்தியாவின் இஷான் கிஷன் 210 ரன்கள் திரட்டி அமர்க்களப்படுத்தினார். அதிக ரன் குவிப்பு பட்டியலில் நமிபியா வீரர் எராஸ்மசும் (956 ரன்), அதிக விக்கெட்டில் ஓமன் வேகப்பந்து வீச்சாளர் பிலால் கானும் (43 விக்கெட்) முதலிடத்தை பிடித்தனர்.

20 ஓவர் கிரிக்கெட்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த சீசனில் 8-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்ததும், அதில் இங்கிலாந்து வாகை சூடியதும் முக்கிய அம்சமாகும். இதை கருத்தில் கொண்டே கடந்த ஆண்டில் அதிகமான 20 ஓவர் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 531 ஆட்டங்கள் அரங்கேறின. 88 அணிகள் விளையாடின. அதிகபட்சமாக இந்தியா 40 ஆட்டங்களில் களம் இறங்கி 28-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. மற்றொரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இந்தியாவுக்கு அடுத்து அதிக வெற்றிகளை பெற்ற அணியாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தான்சானியா (21 வெற்றி, 5 தோல்வி, 3 முடிவில்லை) இருக்கிறது.

ரன்வேட்டையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 31 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 9 அரைசதம், 68 சிக்சருடன் 1,164 ரன்கள் எடுத்து 'நம்பர் ஒன்'-ஆக திகழ்கிறார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரே ஆண்டில் 50 சிக்சருக்கு மேல் நொறுக்கிய ஒரே வீரர் இவர் தான்.

Next Story