வெற்றியுடன் தொடங்கப்போவது யார்? - ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்,
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த ஆண்டு 8-வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஐதராபாத் அணி இந்த சீசனுக்கான அணியில் பல மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் களம் இறங்குகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன் கழற்றி விடப்பட்டு எய்டன் மார்க்ரம் புதிய கேப்டனாக்கப்பட்டு இருக்கிறார். நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்து ஆடி வரும் மார்க்ரம், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள். இது ஐதராபாத் அணிக்கு இழப்பாகும். அவர்கள் அடுத்த லீக் ஆட்டத்துக்கு முன்னதாக அணியினருடன் இணைகிறார்கள்.
மார்க்ரம் இல்லாததால் புவனேஷ்வர் குமார் ஐதராபாத் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அடில் ரஷித், டி.நடராஜன், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் அந்த அணிக்கு வலுசேர்க்கின்றனர்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்தது. அப்போது ரன் குவிப்பில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர் (4 சதம் உள்பட 863 ரன்கள்), விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தை தனதாக்கிய யுஸ்வேந்திர சாஹல் (27 விக்கெட்) மற்றும் ஜோ ரூட், தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஆர்.அஸ்வின், ஆடம் ஜம்பா, நவ்தீப் சைனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அங்கம் வகிப்பதால் அந்த அணி வலுவாக விளங்குகிறது.
இரண்டு அணிகளும் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் உள்ளன. இவ்விரு அணிகள் இதுவரை 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கின்றன.
இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் 4-வது இடம் பெற்ற பெங்களூரு அணியில் விராட்கோலி, பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், பின் ஆலென், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா, ஷபாஸ் அகமது, பிரேஸ்வெல் உள்ளிட்ட தரமான வீரர்கள் பட்டாளம் அடங்கியுள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது. ஹேசில்வுட், ரஜத் படிதார் ஆகியோர் காயம் காரணமாக முதல் கட்ட ஆட்டங்களில் ஆடமுடியாதது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாகும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அப்போது 8 ஆட்டங்களுக்கு பிறகு தான் அந்த அணி முதல் வெற்றியையே பெற்றது. மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருப்பதால் இந்த சீசனில் முழுவதுமாக விளையாடமாட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் திரும்பி இருந்தாலும் பும்ராவால் ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தை அந்த அணி எப்படி நிரப்பப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ரூ.17½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் கேமரூன் கிரீன், கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மும்பை அணியை ஒரு துரதிர்ஷ்டம் நீண்ட காலமாக துரத்தி கொண்டிருக்கிறது. அதாவது அந்த அணி கடைசி 10 சீசனில் தொடர்ச்சியாக தனது முதல் லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த மோசமான சாதனையை மாற்றி போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க மும்பை அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். அதே நேரத்தில் கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட பெங்களூரு அணி அந்த உத்வேகத்தை நீடிக்க வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் மும்பையும், 13-ல் பெங்களூருவும் வெற்றி கண்டு இருக்கின்றன.
இவ்விரு ஆட்டங்களையும் டி.வி.யில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், இணையதளத்தில் 'ஜியோ சினிமா' விலும் பார்க்கலாம்.