தொடரை முழுமையாக வெல்லுமா இந்திய அணி... இலங்கையுடன் கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று மோதல்


தொடரை முழுமையாக வெல்லுமா இந்திய அணி... இலங்கையுடன் கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று மோதல்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:17 AM GMT (Updated: 15 Jan 2023 12:44 AM GMT)

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது.

திருவனந்தபுரம்,

ஒரு நாள் கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இலங்கை அணி ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் சதத்தோடு 373 ரன் குவித்து மிரட்டிய இந்தியா 2-வது ஆட்டத்தில் 216 இலக்கை தடுமாறித் தான் எட்டிப்பிடித்தது. மிடில் வரிசையில் லோகேஷ் ராகுல் (64 ரன்) பொறுப்புடன் விளையாடி அணியை கரைசேர்த்தார்.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி, அக்ஷர் பட்டேலுக்கு ஓய்வு அளித்து விட்டு அர்ஷ்தீப்சிங், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இன்னும் 3 நாட்களில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. அந்த தொடருக்கு வெற்றியோடு நுழைய இந்தியா ஆர்வமாக உள்ளது.

ஆனால் பேட்டிங்கில் முதல் இரு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத 'அதிரடி சூரர்கள்' சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோருக்கு இந்த ஆட்டத்திலும் இடம் கிடைப்பது கேள்விக்குறி தான். இது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷனை வலுக்கட்டாயமாக வெளியே உட்காரவைக்கவில்லை. மற்றவர்கள் நன்றாக ஆடுகிறார்கள். அது தான் விஷயம். ஒரு வீரராக அவர்கள் தங்களுக்குரிய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாடி இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சூர்யகுமார் யாதவ் சூப்பர் பார்மில் உள்ளார். தனக்குரிய வாய்ப்பு வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்' என்றார்.

இலங்கை எப்படி?

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் சீரற்ற வகையில் உள்ளது. குறிப்பிட்ட வீரர்கள் ஒருசேர கைகொடுப்பதில்லை. அதனால் தான் தள்ளாடுகிறது. கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ் மட்டுமே நல்ல பார்மில் உள்ளனர். மற்ற வீரர்களும் நிலைத்து நின்று ஆடினால் தான் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் வீழ்ச்சியில் இருந்து நிமிர்வது கடினம் தான்.

போட்டி நடக்கும் திருவனந்தபுரம் ஆடுகளம் பொதுவாக பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியது. இங்கு இதற்கு முன்பு ஒரு நாள் போட்டி ஒன்று மட்டுமே நடந்துள்ளது. 2018-ம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 104 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.

பிற்பகல் 1.30 மணிக்கு..

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி அல்லது அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா அல்லது நுவானிது பெர்னாண்டோ, ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story