பெண்கள் பிரிமீயர் லீக்: உ.பி.அணி திரில் வெற்றி...முதல் தோல்வியை சந்தித்த மும்பை...!


பெண்கள் பிரிமீயர் லீக்: உ.பி.அணி திரில் வெற்றி...முதல் தோல்வியை சந்தித்த மும்பை...!
x

Image Courtesy: @wplt20

பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் ஆடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களம் புகுந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த தேவிகா 1 ரன்னிலும், அலிசா ஹெய்லி 8 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த கிரன் நவ்கிரே 12 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ரன்களை சேர்த்தன. இதில் மெக்ராத் 38 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் இரண்டு பந்துகளை டாட் ஆக வீசிய வாங் மூன்றாவது பந்தில் சிக்சர் கொடுத்தார். இதன் மூலம் உ.பி. அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உ.பி. தக்கவைத்து கொண்டது.

அதேவேளையில் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வந்த மும்பை சந்தித்த முதல் தோல்வி இது ஆகும். இன்று நடக்கும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு-குஜராத் அணிகள் மோத உள்ளன.



Next Story