பெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லப்போவது யார்? - டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்


பெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லப்போவது யார்? - டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x

image courtesy: Women's Premier League (WPL) twitter

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.

லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி அடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. டெல்லி அணி மும்பை, உ.பி.வாரியர்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டது. மற்றபடி இந்த சீசனில் எல்லா ஆட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி அசத்தியது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் மெக் லானிங் (4 அரைசதம் உள்பட 308 ரன்கள்), ஷபாலி வர்மா (265 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (235 ரன்), அலிஸ் கேப்சியும் (230 ரன்), பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் மரிஜானா காப் (11 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெஸ் ஜோசசென் (11 விக்கெட்), ராதா யாதவ் (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டேவும் (தலா 8 விக்கெட்) அசத்தி வருகிறார்கள்.

மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடத்தை பிடித்தது. லீக் சுற்றில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் 5 ரன் வித்தியாத்தில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் நடப்பு தொடரில் அதிக ரன் குவித்தவரான ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (2 அரைசதத்துடன் 312 ரன்கள்) ஜொலித்து வருகிறார். வெளியேற்றுதல் சுற்றில் பெர்ரி ஆட்டமே (66 ரன்) அந்த அணி இறுதிபோட்டியை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது. கேப்டன் மந்தனா (269 ரன்), ரிச்சா கோஷ் (240 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். சோபி டெவின் சோபித்தால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஆஷா சோபனா (10 விக்கெட்), ஸ்ரேயங்கா பட்டீல், சோபி மோலினெக்ஸ் (தலா 9 விக்கெட்) வலுசேர்க்கிறார்கள். ரேணுகா சிங், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோரின் பந்து வீச்சு ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

இந்த சீசனில் பெங்களூருவுக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 25 ரன், ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ள டெல்லி அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்ட வருத்தத்தை போக்கும் வகையில் கோப்பையை கையில் ஏந்த தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இதுவரை டெல்லிக்கு எதிராக ஆடிய 4 ஆட்டங்களிலும் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி போராடும்.

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் கடந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது. ஆனால் பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் இந்த பிரீமியர் லீக் போட்டியில் 2-வது ஆண்டிலேயே கோப்பை ஏக்கத்தை போக்க இரு அணிகளுக்கும் வாய்ப்பு கிட்டிருக்கிறது. கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப், ஜெஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், மின்னு மணி, தானியா பாட்டியா, ஷிகா பாண்டே.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: ஸ்மிர்தி மந்தனா (கேப்டன்), சோபி டெவின், எலிஸ் பெர்ரி, திஷா கசாத், ரிச்சா கோஷ், சோபி மொலினெக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பட்டீல், ஆஷா சோபனா, ஷிரத்தா போகர்கேர், ரேணுகா சிங்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story