பெண்கள் டி20 கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி


பெண்கள் டி20 கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
x

image courtesy: BCCI Women twitter

20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ரேணுகா சிங்கின் முதல் ஓவரிலேயே சோபியா டங்லி (1 ரன்) அலிஸ் கேப்சி (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. டேனி வியாட், நாட் சிவர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

டேனி வியாட் 75 ரன்களிலும் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), நாட் சிவர் 77 ரன்களிலும் (53 பந்து, 13 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் 26 ரன்னிலும், ஷபாலி வர்மா 52 ரன்னிலும் (42 பந்து, 9 பவுண்டரி) அவுட்டாகினர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story