பெண்கள் டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பாகிஸ்தான்


பெண்கள் டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பாகிஸ்தான்
x

Image Courtesy: @ICC

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.

கராச்சி,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்த நிலையில் 3-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஒவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேம்பல்லே 26 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சடியா இக்பால், நிதா டார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 85 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 16.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 87 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆயிஷா ஜாபர் 42 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 ஆட்டங்கள் முடிவில் 3-1 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.


Next Story