உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு 11 ஆயிரம் பேர் பாதுகாப்பு...!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்துக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அகமதாபாத்,
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளிக்கலாம். கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துள்ளன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் நேற்று காந்தி நகரில் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில உள்துறை இணைமந்திரி ஹர்ஷ் சங்கவி, மாநில போலீஸ் டிஜிபி விகாஸ் சஹாய், அகமதாபாத் காவல் துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அகமதாபாத் காவல் துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் கூறியதாவது,
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி பூபேந்திர படேல் ஆய்வு செய்துள்ளார். ஆட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் 7,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன், மைதானத்தைப் பாதுகாக்கவும், ஆட்டத்தின் போது நகரின் பதற்றமான பகுதிகளில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் கிட்டத்தட்ட 4,000 ஊர்க்காவல் படையினரை பணியில் ஈடுபடுத்த உள்ளோம்.
இவர்கள் தவிர, என்.எஸ்.ஜி.,யின் மூன்று 'ஹிட் டீம்'களையும், ஒரு டிரோன் குழுவையும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்த உள்ளோம். எங்கள் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படையின் ஒன்பது குழுக்களும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்படுவார்கள்.
ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள நான்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 21 துணை போலீஸ் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் ஆட்ட நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவார்கள். மாநில ஆயுதப்படை போலீசாரின் 13 கம்பெனிகளைத் தவிர, 3 கம்பெனி விரைவு அதிரடிப் படை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளோம். இவ்வாறு ஜி.எஸ்.மாலிக் கூறினார்.